Thursday, 23 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

சுரேஷ் சலேயின் விடுதலையை வலியுறுத்தி மூன்றாவது நாளாகவும் தொடரும் சத்தியாக்கிரகப் போராட்டம்!

சுரேஷ் சலேயின் விடுதலையை வலியுறுத்தி மூன்றாவது நாளாகவும் தொடரும் சத்தியாக்கிரகப் போராட்டம்!

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (10) மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டி அவரது ஆதரவாளர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

“முன்னாள் புலனாய்வுப் பிரதானிக்கு இழைக்கப்படும் அநீதிகள் நிறுத்தப்பட வேண்டும்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோட்டை புகையிரத நிலைய வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் போராட்டத்தின் முதல் இரண்டு நாட்களுடன் ஒப்பிடுகையில், மூன்றாவது நாளான இன்று அதில் கலந்துகொண்ட ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருந்தது.

இதற்கிடையில் போராட்டம் நடைபெற்ற பகுதியில் நேற்றைய தினம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. புகையிரத நிலையத்தைப் பயன்படுத்திய மற்றும் அப்பகுதியூடாகப் பயணித்த சில பொதுமக்கள், போராட்டக்காரர்களுக்கு எதிராக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், சில சந்தர்ப்பங்களில் கடுமையான வாய்த்தர்க்கங்களும் ஏற்பட்டன.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படும் நிலையில், அதனுடன் தொடர்புடைய நபருக்காக ஆதரவு போராட்டம் நடத்துவது பொருத்தமற்றது என சில பொதுமக்கள் கருத்து வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் போராட்டம் இடம்பெற்ற பகுதியில் ஒரு கட்டத்தில் பதற்றமான நிலையும் உருவாகியிருந்தது.

பகிர்க: Facebook Twitter