சங்கீதன் என்னும் தமிழ் சொல்லிசை பாடகர் பயங்கர வாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் (6) கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
‘குரல்வளையின் விலங்குடைக்க அணிதிரள்வோம்’ எனும் மகுடத்தில் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டம் கிளிநொச்சி, பழைய கச்சேரிக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
இன்றையதினம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது,
‘விடுதலை செய்ய விடுதலை செய் சங்கீதனை விடுதலை செய்,
சட்டத்தின் ஆட்சி சமமாக இருக்கட்டும்,
சட்டத்தை அடக்குமுறை கருவியாகப் பயன்படுத்தாதே,
பாடல் உரிமை எங்கள் உரிமை,
பறிக்காதே பறிக்காதே கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்காதே,
அடக்குமுறையை நிறுத்து,
கலைஞர்களின் குரல்வளையை நெரிக்காதே,
அநீதியான சட்டமான பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனே நீக்கு,
சொல்லிசைப் பாடகன் குற்றவாளியா?
கிளிநொச்சிக் கலைஞனை உடனே விடுதலை செய்,
பாடினால் சிறையா? பேசினால் கைதா?
ஏதேச்சதிகாரக் கைதுகளை உடனே நிறுத்து,
கலைஞர்களின் படைப்புரிமை சட்டப்பூர்வமானது!
சட்டம் வழங்கிய உரிமையை அதிகாரத்தால் பறிக்காதே,
சர்வதேச மனித உரிமை பிரகடனங்களை மதிக்கக் கற்றுக்கொள்
கொடூரமான பயங்கரவாத தடைச்சட்டத்தை (PTA) உடனே நீக்கு’
முதலான கோசங்களை எழுப்பியதோடு பதாதைகளையும் ஏந்தியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலைஞர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

