திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டோரை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கிண்ணியா பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று இரவு (25) விஷேட சோதன நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது உப்பாறு பகுதியில் எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 உழவு இயந்திரங்களும், 4 டிப்பர் வாகனங்களும் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டன.
அத்துடன், அவ்வாகனங்களின் சாரதிகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்று இரவு கிண்ணியா – சூரங்கள் பகுதியில் பொலிஸார் நடத்திய மற்றுமொரு சோதனையின் போது, சட்டவிரோதமான முறையில் களஞ்சியசாலைக்குக் கடத்திச் செல்லப்பட்ட கடல் சிப்பிகள் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதில் தலா 50 கிலோகிராம் எடை கொண்ட 70 சிப்பி மூடைகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட வாகனங்களின் சாரதிகளையும், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான சட்டப் பூர்வ ஏற்பாடுகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.