Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

சிறுவனுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகர்- நீதிமன்றின் உத்தரவு!

சிறுவனுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகர்- நீதிமன்றின் உத்தரவு!

அம்பாறை கல்முனையில் 17 வயதுச் சிறுவன் ஒருவருக்குப் பணம் தருவதாகக் கூறி, ஓரினச்சேர்க்கை மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 56 வயது வர்த்தகரை, எதிர்வரும் ஜூன் மாதம் 08ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை, கல்முனை வர்த்தக நிலையம் ஒன்றில் நீண்டகாலமாக இத்தகைய சட்டவிரோதப் பாலியல் செயற்பாடுகள் இடம்பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த 17 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்கள் குறித்த வர்த்தக நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.

இதன்போது அங்கு வந்த இரு சிறுவர்களையும் வரவேற்ற வர்த்தகர், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதற்காக 10,000 ரூபாய் தருவதாகப் பேரம் பேசி சிறுவர்களில் ஒருவரை பாலியல் செயற்பாட்டில் ஈடுபடுத்தியுள்ளார்.

மற்றைய சிறுவன் தனது நண்பன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் காட்சிகளை, வர்த்தகரின் கைத்தொலைபேசியிலேயே இரகசியமாகப் பதிவு செய்துள்ளார். பின்னர் ஏற்கனவே வர்த்தகர் தருவதாக ஒப்புக்கொண்ட 10,000 ரூபாய் பணத்தை வழங்க மறுத்ததால், ஆத்திரமடைந்த இரு சிறுவர்களும் காணொளி பதிவு செய்யப்பட்ட வர்த்தகரின் கைத்தொலைபேசியை வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

அதுமட்டுமன்றி காணொளியைச் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துவிடுவதாகக் கூறி, வர்த்தகரை அச்சிறுவர்கள் மிரட்டியுள்ளனர். இதனையடுத்து சுதாகரித்துக் கொண்ட 56 வயதுடைய, திருமணமான வர்த்தகர், கடந்த மே மாதம் 06ஆம் திகதி கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வர்த்தக நிலையத்திற்கு வந்த இரு சிறுவர்கள், மேசையிலிருந்த விலையுயர்ந்த கைத்தொலைபேசியைத் திருடிச் சென்றுவிட்டதாக முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார்.

வர்த்தகரின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், அம்பாறை புறநகர்ப் பகுதியில் வைத்து அந்த இரு சிறுவர்களையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையின் போதே, இந்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

மே 21ஆம் திகதி இவ்வழக்கு கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. காணொளியைப் பார்வையிட்ட பதில் நீதிவான், பாதிக்கப்பட்ட சிறுவனைச் சட்ட வைத்திய அதிகாரியின் (JMO) மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டதுடன், முதன்மைச் சந்தேக நபரான வர்த்தகரைக் உடனடியாகக் கைது செய்யுமாறும் கட்டளையிட்டு வழக்கைத் தள்ளிவைத்தார்.

இந்த நிலையில் நேற்றையதினம் (25) இவ்வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம். சாஜித் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதன்போது தலைமறைவாகியிருந்த வர்த்தகர் 5 சட்டத்தரணிகளுடன் நீதிமன்றில் முன்னிலையாகிச் சரணடைந்தார்.

நீதிமன்ற வளாகத்தில் வைத்துச் சந்தேக நபரான வர்த்தகரைப் பொலிஸார் முறைப்படி கைது செய்து, பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.

பின்னர் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, சந்தேக நபரை எதிர்வரும் ஜூன் மாதம் 08ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

பகிர்க: Facebook Twitter