ஹுங்கம, கட்டகடுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.
லொறி ஒன்றில் சட்டவிரோதமாக கால்நடைகள் கடத்தப்படுவதாக ஹுங்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கட்டகடுவ பகுதியில் வீதித் தடை ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் குறித்த லொறி வீதித் தடையையும் மீறி தப்பிச் சென்றுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் அந்த லொறியைப் பின்தொடர்ந்து சென்று நிறுத்த முயன்ற போதிலும், அது நிறுத்தப்படாமல் பயணித்ததால், துப்பாக்கிச் சூடு நடத்தி லொறி நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது லொறியில் இருந்த 4 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹுங்கம பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.