குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் கட்டுப்பாட்டாளரான கே. ஹேரத் என்பவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்காக ‘பயனர் மேலாண்மை தொகுதி’ (User Management Module) எனப்படும் மென்பொருளை நிறுவுவதற்காக 9,831,250 ரூபாய் பணம் செலுத்தப்பட்டிருந்தும், அந்த மென்பொருளை நிறுவத் தவறியமை மற்றும் மென்பொருளைப் பெற்றுக்கொள்ளாமல் அரசாங்கப் பணத்தை மோசடியான முறையில் பெற்றுக்கொண்டமை ஆகியவையே இவர் மீது சுமத்தப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டுகளாகும்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக இந்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அரசாங்கப் பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை மற்றும் மோசடி செய்தமை தொடர்பில் இவருக்கு எதிராக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.