புலிகள் அமைப்பை அழித்த மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்ய முயற்சித்தால், இந்த அரசாங்கம் அந்த கணமே கவிழும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு நேற்று செவ்வாய்க்கிழமை சுமார் இரண்டரை மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்தது.
விசாரணையின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அங்கிருந்து வெளியேறிய வேளையில், அங்கு திரண்டிருந்த மொட்டுக் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் மனோஜ் கமகே உரையாற்றினார்.
இதன்போது விசாரணைக்கான காலம் குறித்து மனோஜ் கமகே கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
மனோஜ் கமகே இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
மே மாதம் என்பது பிரபாகரனின் கதையை முடித்த மாதமாகும். அதனால்தான் இந்த மாதத்தை அரசு குறிவைத்துள்ளது. பிரபாகரனின் ஆத்மாவை சாந்தியடைய வைக்கவே ஆளுந்தரப்பு இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுகின்றது.
மஹிந்த ராஜபக்ஷவை ஒரு ‘சிங்கம்’ என வர்ணித்த மனோஜ் கமகே, அவர் ஒருபோதும் குகைக்குள் ஓடி ஒளியமாட்டார் என்றும், சட்டத்துக்கு மதிப்பளித்து நேடியாக வந்து வாக்குமூலம் வழங்கிச் சென்றுள்ளார் என்றும் தெரிவித்தார்.
திறைசேரி பிணைமுறி மோசடி மற்றும் நிலக்கரி மோசடியுடன் தொடர்புடையவர்களையும் இதேபோன்று அழைத்து வந்து விசாரிக்க அரசுக்குத் துணிவிருக்கின்றதா என்றும் அவர் சவால் விடுத்தார்.
“மஹிந்த ராஜபக்ஷ என்பவர் இந்நாட்டு அரசியல் கலாசாரம். அவர் மீது கைவைத்தால் அழிவுதான் ஏற்படும்” என்றும் அவர் இதன்போது எச்சரிக்கை விடுத்தார்.
இவ்விடயம் தொடர்பாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச கொழும்பில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,
புலம்பெயர் தமிழ் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட பொதுமக்கள் மீது மின் கட்டண சுமையை அரசு ஏற்றியுள்ளது. மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க போன்றவர்கள் பாதுகாக்கப்படும் நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் மீதே அரசு கவனம் செலுத்துகிறது.
புலிகள் அமைப்பை அழித்த மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்ய முயற்சித்தால், இந்த அரசாங்கம் அந்த கணமே கவிழும். தேசியத்துக்கு எதிராக செயற்படுவது அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும் என விமல் வீரவன்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.