குற்றச் செயல்கள் பலவற்றுடன் தொடர்புடைய போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
குருநாகல், பன்னல பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பொலன்னறுவை தீப உயன அருகில் வைத்து நேற்றிரவு (05) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் பொரளை, கண்டி, மினுவாங்கொடை மற்றும் திவுலபிட்டிய ஆகிய பொலிஸ் நிலையங்களால் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் இவர் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த நபர் என்பதும் ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த போலி வைத்தியரிடமிருந்து வைத்தியர்கள் பயன்படுத்தும் ஸ்டெதஸ்கோப், வைத்தியர்களுக்கான சீருடை மற்றும் போலி அடையாள அட்டை உள்ளிட்ட பல உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஹிங்குரக்கொடை வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் வைத்தியராக சந்தேக நபர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைதான சந்தேக நபர் இன்று (06) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.